பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைக்காக குழு அமைத்த மதிமுக
பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான தேர்தல் அட்டவணையை பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பா.ஜனதா தனது ஆட்சியை மீண்டும் தக்க வைக்க தயாராகி வருகிறது.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த கூட்டணியில் பல மாநிலங்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை ஒட்டி, கூட்டணி பேச்சுவார்த்தை குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவை அமைத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் 4 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. துணைப் பொதுச்செயலாளர் ராசேந்திரன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.