Tamilசெய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி – சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக கொங்கு மண்டலத்தில் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்டத்தில் மட்டும் 3 நாட்கள் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். கோவையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார். தொடர்ந்து நேற்று இரவு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக அவர் கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் பல குற்றச் செயல்களுக்கு மூலகாரணமாக இருப்பது மதுப்பழக்கம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அவசியமற்றது. ஒரே நாடு என்றால் ஏன் காவிரியிலும், முல்லை பெரியாரிலும் தண்ணீர் தர மறுக்கிறார்கள்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. தி.மு.க. அரசியல் கட்சி கிடையாது. அது ஒரு குடும்ப சொத்து. கள்ளுக்கு தமிழகத்தில் அனுமதி அளித்தால் சாராய ஆலைகள் முடங்கிவிடும் என்பதால் கள்ளுக்கு அனுமதி அளிக்க மறுக்கிறார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்தால் காங்கிரஸ் அல்லாத தொகுதிகளில் தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கிறேன். 2024-ம் தேர்தலில் வென்று மீண்டும் மோடி வந்தால் இந்தியாவே இருக்காது.

காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் நாட்டை விற்பதில் போட்டி. இதில் மோடி நன்றாக வியாபாரம் செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற சீமான், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரையும் அறிவித்தார். இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் சுரேஷ் போட்டியிடுவார் என அவர் தெரிவித்தார்.