பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவில் தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் அந்தந்த பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளை சந்தித்து தேர்தலையொட்டி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் 6-வது நாளாக நேற்று ராமநாதபுரம், கடலூர் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் நிர்வாகிகளிடம் அவர்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட பாராளுமன்ற தொகுதிகள் குறித்த நிலவரம், மக்களின் எதிர்பார்ப்பு என்ன?, அரசின் திட்டங்கள் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்? என்பது உள்பட பல்வேறு விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
அதிலும் ராமநாதபுரம் தொகுதியில் ஏற்கனவே தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நின்று வெற்றி பெற்ற தொகுதியாக உள்ள நிலையில், இந்த முறை தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதியை நாம் வென்றாக வேண்டும். இன்னும் தேர்தலுக்கு 60 முதல் 65 நாட்கள்தான் இருக்கிறது. 2019 பாராளுமன்ற தேர்தலைவிட, இந்த தேர்தல் மிக மிக முக்கியம். தி.மு.க. தலைவர் யாரை கை காட்டுகிறாரோ, அவர்தான் பிரதமராக வர வேண்டும். எதிர்க்கட்சியாக நாம் இருக்கும்போதே 40 தொகுதிகளில் வெற்றி அடைந்தோம். இப்போது ஆளுங்கட்சியாக இருக்கிறோம். அந்த தேர்தலைவிட நடைபெற உள்ள தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்துதான் காணப்பட வேண்டும்.
இந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிதான், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அடித்தளம். எனவே தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பொதுமக்களிடம் நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். மக்களிடம் ஆதரவு பெற்ற ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். கருணாநிதிதான் உங்கள் தொகுதியில் வேட்பாளர் என்று மனதில் வைத்து நீங்கள் பணியாற்ற வேண்டும்’ என்றார்.