X

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள்!

நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் 539 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களை வைத்து ஒரு தனியார் அமைப்பு ஆய்வு செய்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 233 பேர் (43 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களில் 159 பேர் மீது கொலை, கடத்தல், கற்பழிப்பு போன்ற கொடுங்குற்ற வழக்குகள் உள்ளன. குற்ற வழக்கு உள்ளவர்களில் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் 116 பேர் (கொடுங்குற்ற வழக்கில் 87 பேர்), காங்கிரசார் 29 பேர் (கொடுங்குற்ற வழக்கில் 19), தி.மு.க.வினர் 10 பேர் (கொடுங்குற்ற வழக்கில் 6) என கட்சிகளின் பட்டியல் நீள்கிறது.

2009-ம் ஆண்டில் இருந்து குற்றப் பின்னணியுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருப்பது வருத்தத்திற்குரியது. 2009-ம் ஆண்டு 30 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகளும், 14 சதவீதம் பேர் மீது கொடுங்குற்ற வழக்குகளும் இருந்தது. 2014-ம் ஆண்டில் இது 34 சதவீதம் மற்றும் 21 சதவீதம் என்று அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

கேரளா மாநிலம் இடுக்கி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் டீன் குரியகோஸ் மீது அதிகபட்சமாக 204 வழக்குகள் உள்ளன. இதில் 37 கொடுங்குற்றங்களும் அடங்கும். சில வழக்குகளில் தண்டனையும் அனுபவித்துள்ளார்.

குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 10 பேர் எம்.பி.க்கள் ஆகியுள்ளனர். அவர்களில் பா.ஜ.க.வினர் 5 பேர், காங்கிரசார் 4 பேர், ஒருவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

வெற்றி பெற்றவர்களில் 475 பேர் (88 சதவீதம்) கோடீஸ்வரர்கள். அவர்களில் 265 பேர் பா.ஜ.க.வையும், 43 பேர் காங்கிரசையும், 22 பேர் தி.மு.க.வையும் (உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மற்ற கட்சியினரையும் சேர்த்து) சேர்ந்தவர்கள். கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு தேர்தலிலும் உயர்ந்து வருகிறது. 2009-ம் ஆண்டில் 58 சதவீதமாக இருந்த கோடீஸ்வர எம்.பி.க்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 88 சதவீதமாக அதிகரித்தது.

பெரும் பணக்கார எம்.பி.க்களில் முதல் 3 இடங்களிலும் காங்கிரசார் தான் உள்ளனர். அவர்கள் மத்தியபிரதேசம் நகுல்நாத் (ரூ.660 கோடி), தமிழ்நாடு எச்.வசந்தகுமார் (ரூ.417 கோடி), கர்நாடகா சுரேஷ் (ரூ.338 கோடி). குறைந்த சொத்து உள்ள முதல் 3 பேர் ஆந்திராவை சேர்ந்த மாதவி (ரூ.1.41 லட்சம்), ஒடிசா சந்திரானி முர்மு (ரூ.3.40 லட்சம்), ராஜஸ்தான் மகந்த் பாலக்நாத் (ரூ.3.53 லட்சம்).

தொடர்ந்து 2-வது முறையாக எம்.பி.யான 224 பேரின் சொத்துகள் சராசரியாக 29 சதவீதம் உயர்ந்துள்ளது. அவர்களில் பா.ஜ.க.வினர் 154 பேருக்கு 35.62 சதவீதமும், காங்கிரசில் 14 பேருக்கு 150 சதவீதமும் சொத்து உயர்ந்துள்ளது.

392 பேர் பட்டதாரிகள் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள். 128 பேர் பள்ளிக்கூடத்துக்கு சென்றிருக்கிறார்கள். ஒருவர் எழுதப்படிக்க மட்டும் தெரிந்தவர். ஒருவர் படிக்காதவர். மற்றவர்கள் 17 பேர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.