பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளித்தது ஏன்? என்பது பற்றி தி.மு.க. நாளேடான முரசொலி விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அதில் வெளியாகி உள்ள கட்டுரை வருமாறு:-
கழக வரலாற்றைஊன்றிக் கவனிப்பவர்களுக்கு அது தெரியும். பேரறிஞர் அண்ணா காலத்திலேயே நாவலர் இரா.நெடுஞ்செழியன் சட்டமன்ற வேட்பாளர், அவரது தம்பி இரா.செழியன் பாராளுமன்ற வேட்பாளர். பேராசிரியர் அன்பழகன் பாராளுமன்ற உறுப்பினர், அவரது இளவல் பேராசிரியர் அறிவழகன் சட்டமன்ற மேலவை உறுப்பினர்.
அன்றைய கழக முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஏ.கோவிந்தசாமி மறைவுக்கு பின் அவரது தொகுதியில் அவரது மனைவியை வேட்பாளராக தேர்ந்தெடுத்து அறிவித்தார் அண்ணா.
அண்ணா தென்சென்னை தொகுதியில் வெற்றிபெற்று பாராளுமன்றத்துக்கு சென்றார். ஆனால் தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்க வேண்டிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதனால் தென்சென்னை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் கலைஞரின் மருமகனான முரசொலி மாறனை அண்ணா தேர்ந்தெடுத்தார்.
அண்ணாவின் மறைவுக்கு பின் அண்ணியாரை தலைவர் கலைஞர் சட்ட மன்ற மேலவை உறுப்பினராக்கினார்.
இவை மட்டுமல்ல, கழக முன்னணி தலைவர் என்.வி. நடராசன் தமிழக அமைச்சராக இருந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது அவரது துணைவியார் புவனேஸ்வரி அம்மாள் அதிலே பங்கேற்று கைக்குழந்தையுடன் சிறை சென்றார். அவரது மடியில் தவழ்ந்த கைக்குழந்தை தான் பிற்காலத்தில் கலைஞர் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்த என்.வி.என்.சோமு.
இப்படி பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சமும் உள்ளது.
வாரிசுகள் என்பதற்காக மட்டும் அவர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் தரப்படுவதில்லை. அவர்கள் இந்த இயக்க வளர்ச்சிக்காக இயக்கத்துடன் இணைந்து பணியாற்றுவதால்தான், அதனுடன் தொடர்ந்து பயணிப்பதாலும்தான் அவர்கள் பரிசீலனைக்குள்ளாகிறார்கள்.
பொன்முடியின் மகனுக்கு ‘சீட்’டா? துரைமுருகன் புதல்வருக்கு வாய்ப்பா? என்றெல்லாம் கேட்டு கழகத் தோழர்களை குழப்ப நினைப்பவர்களுக்கு ஒன்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
துரைமுருகனையும், பொன்முடியையும் வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்த போது “காலம் காலமாக கட்சிக்கு உழைத்தவர்கள் இருக்க இவர்களுக்கு சீட்டா” எனக் கேட்டு குழப்பம் விளைவிக்க முனைந்தவர்களும் உண்டு. துரைமுருகன், பொன்முடி போன்றோர் மகன்களாக பிறந்ததால் அவர்களுக்குரிய உரிமைகளை இழக்க வேண்டுமா? தந்தையுடன் சேர்ந்து இந்த இயக்கத்துக்கு ஆற்றிய பணிகள் புறந்தள்ளப்பட வேண்டுமா?
பொன்முடி அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற கழக மாநாடுகளுக்கு விழுப்புரத்தில் இருந்து மகளிரை திரட்டி லாரிகளில் அவர்களை ஏற்றிக் கொண்டு, அதே லாரியின் முன்னால் அமர்ந்து தான் அமைச்சரின் மனைவி என்ற மமதையின்றி கோஷம் எழுப்பிக் கொண்டு வருபவர்தான் பொன்முடியின் துணைவியார்.
விழுப்புரத்தில் இருந்து இளைஞர்களை திரட்டி தான் ஒரு மருத்துவர் என்று எண்ணிடாமல் தொண்ட ரோடு தொண்டராக பயணித்தவர்தான் இன்றைய கள்ளக்குறிச்சி வேட்பாளர்.
தான் வெளிநாடு சென்று படித்தவன், எம்.பி.ஏ. பட்டதாரி என்ற தற்பெருமையின்றி கழகத் தோழர்களை தன் உறவினராக பாவித்து, அவர்கள் சுகதுக்கங்களில் பங்கேற்று கழக மேடைகளில் ஓரமாக நின்று தொண்டருக்கும் தொண்டராக விளங்குபவர் இன்றைய வேலூர் வேட்பாளர்.
அடுத்து டாக்டர் கலாநிதி வீராசாமி. இவர் ஆற்காட்டாரின் வாரிசு மட்டுமல்ல, கழக மருத்துவர் அணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கழகத்தோடு நீண்ட நெடுநாட்களாக பயணித்துக் கொண்டிருப்பவர். தொண்டர்களோடு தொண்டராக ஒன்றறக் கலந்தவர். ஆற்காட்டாரின் குடும்ப வாரிசாக மட்டுமின்றி கொள்கை வாரிசுகளில் ஒருவராக திகழ்பவர்.
அதேபோல தமிழச்சி தங்கப்பாண்டியன். தென் மாவட்டங்களில் தென்னரசுவுடன் இணைந்து கழகம் வளர்த்த காவலர் தங்கப் பாண்டியனின் புதல்வி. பிறக்கும்போதே கழக குழந்தையாக பிறந்தவர். கழக பணிக்காக பேராசிரியர் பதவி துறந்து, கழக மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியவர். சிறந்த படிப்பாளி மட்டுமல்ல, படைப்பாளியும் கூட. இப்படி சிறப்புமிகு தேர்வாக வேட்பாளர் தேர்வுகள் அமைந்து விட்டன.
தி.மு.கழகத்தை பொறுத்தவரை குடும்ப அரசியல் நடத்த தேவை இல்லை. ஏனென்றால் அதன் தலைவர்கள், தொண்டர்கள் குடும்பமே அரசியல் குடும்பம். அங்கே விளையாட்டு நடத்த நினைத்தால் ஆப்பசைத்த குரங்கு கதிதான் ஏற்படும்.