பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு 20 தொகுதிகள் – எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் விருப்பம்
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பலமான அணியை உருவாக்க பாரதிய ஜனதா கட்சி காய் நகர்த்தி வருகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று உள்ள பாரதிய ஜனதா கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான பணிகளை அந்தக் கட்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இதன் எதிரொலியாகவே தமிழகத்தில் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமை பதவியில் முழுமையாக அமர்ந்த பிறகு முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதால் தனது செல்வாக்கு என்ன? என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
மதுரையில் பிரமாண்டமான முறையில் அ.தி.மு.க. மாநாட்டை நடத்திக் காட்டிய எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார். பாரதிய ஜனதாவுடன் இணைந்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி என்ற முறையில் கூடுதல் இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் கூடுதல் இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய மந்திரியுமான அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசினார். அப்போது இருவரும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க.வுக்கு இணையான இடங்களில் போட்டியிட காய் நகர்த்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் (அ.தி.மு.க.) 20 இடங்களில் போட்டியிடுங்கள். எங்களுக்கு 20 தொகுதிகளை கொடுத்து விடுங்கள். இந்த இடங்களில் நாங்களும் போட்டியிட்டுக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கும் பிரித்து கொடுத்து விடுகிறோம் என்று கேட்டதாக தெரிகிறது. அமித்ஷாவின் இந்த கூட்டணி வியூகத்துக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்காமல், கூட்டணியில் யார்-யாருக்கு எத்தனை இடங்கள்? என்பது பற்றி பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த கட்சிகளை அப்படியே மீண்டும் கூட்டணியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். குறிப்பாக தே.மு.தி.க.வை மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க.வை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை என்று கூறியதாகவும் தெரிகிறது. இதன் மூலம் கூட்டணியை பலப்படுத்த அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி இருவருமே வரும் நாட்களில் தீவிரம் காட்ட களம் இறங்க உள்ளனர்.
இதன்படி அமித்ஷா அடுத்த மாதம் இறுதியில் அல்லது நவம்பரில் தமிழகத்துக்கு வருகை தர திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது அவர் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்ய முடிவு செய்துள்ளார். இதன் மூலம் அடுத்தடுத்த மாதங்களில் தமிழகத்தில் கூட்டணி தொடர்பான காய் நகர்த்தல்கள் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடனான சந்திப்பின் போது கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாகவும் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கொடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தனது பெயர் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் தன்னை களங்கப்படுத்த சிலர் திட்டமிட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி எண்ணுகிறார். இதை தொடர்ந்து வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அவர் ஏற்கனவே கூறியிருக்கிறார்.
இது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் தனது மீதான விமர்சனங்கள் விஸ்வரூபம் எடுப்பதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. இதன் காரணமாகவே அவர் தன் மீது களங்கம் கற்பிப்பவர்கள் மீது வழக்கு தொடருவேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடனான சந்திப்பின் போது கொடநாடு விவகாரம் பற்றியும் பேசி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.