டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி தஞ்சையில் தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
கர்நாடக அரசு உரிய தண்ணீர் வழங்காததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் காய்ந்து வருகிறது. கண்முன்னே வாடிய பயிரை கண்டு விவசாயி ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவரது குடும்பத்தினரிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். தே.மு.தி.க நிர்வாகிகள் நேரில் சென்று ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விவசாயிகள் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆனால் தமிழகத்தில் விவசாயிகளின் நிலைமை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நாட்டிற்கே உணவு அளிப்பவர்கள் விவசாயிகள். ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீருக்காக கர்நாடகத்தை நாடி இருக்க வேண்டிய நிலை உள்ளது.
கடந்த 1968-ம் ஆண்டிலிருந்தே காவிரி நதிநீர் பிரச்சனை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக காவிரி பிரச்சனை உள்ளது. ஆனால் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை. ஆண்ட கட்சிகள், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகள் இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது தான் உண்மை. இனிமேலாவது காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க செய்ய வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நதிநீர் இணைப்பே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். தே.மு.தி.க என்றைக்கும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும். தற்போது வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தண்ணீர் கடைமடை வரை நிச்சயமாக செல்லாது.
டெல்டா மாவட்டங்களில் சரியாக தூர்வாரவில்லை. மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது. பருவ காலங்களில் பெய்யும் மழை நீர் எங்கு செல்கிறது. அதனை முறையாக சேமிக்கவில்லை. தடுப்பணைகளை அமைத்து மழைநீரை சேமிக்க வேண்டும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் காவிரி பிரச்சனை வருகிறது. மழைக்காலம் வந்தால் மறந்துவிடுகிறோம்.
உண்ணாவிரத நோக்கம் குறித்து கவர்னரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம். விவசாயிகளுக்கு வழங்கப்படக்கூடிய நிவாரணம் என்பது தற்காலிக தீர்வுதான். அவர்களுக்கு தேவை நிரந்தர தீர்வு. எப்பொழுதுதான் அந்த நிரந்தர தீர்வை நாம் அளிக்கப் போகிறோம். எத்தனை வருடங்கள் போராட போகிறோம் .இதற்கு நிரந்தர தீர்வு வர வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சோனியா காந்தியை சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பிரிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. இந்த கூட்டணி பிரிவதற்கு இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் தான் காரணம். இது நிரந்தரமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. நிச்சயம் ஒரு நல்ல தீர்வை தே.மு.தி.க எடுக்கும். உரிய நேரத்தில் தே.மு.தி.க நிலைப்பாடு என்ன என்பதை விஜயகாந்த் நிச்சயம் அறிவிப்பார். தமிழகத்தில் அரசியல் செய்பவர்கள் அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்களே தவிர அடுத்த தலைமுறைக்கான அரசியலை செய்வது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.