Tamilசெய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் திமுக இளைஞரணியை சேர்ந்த 5 பேருக்கு போட்டியிட வாய்ப்பு!

பாராளுமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார். இதற்காக மாவட்டச் செயலாளர் கூட்டத்தை அண்மையில் கூட்டிய அவர், கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருந்தார். அத்துடன் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.2) கூட்டத்தையும் மண்டல அளவில் நடத்த தொடங்கிவிட்டார். இது ஒருபுறம் இருக்க இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி செயல்பாடுகளில் இப்போது தீவிரம் காட்ட தொடங்கி விட்டார்.

எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சினை இருக்கிறதோ அந்த மாவட்டங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களை தனித்தனியாக அழைத்து கட்சி பிரச்சினைகளை கேட்டறிகிறார். மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து பேசுகிறார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகளை நேரில் பார்த்து தெரிந்து கொள்கிறார்.

தி.மு.க.வில் அமைச்சர் உதயநிதியின் ‘கை’ வேகமாக ஓங்கி வருவதால் முன்பு இருந்ததைவிட அவருக்கு முக்கியத்துவம் அதிகரித்து உள்ளது. உதயநிதி வருங்கால தலைவர் என்பதால் அமைச்சர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அவருக்கு அதிக மதிப்பும், மரியாதையும் கொடுப்பதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.

முன்பெல்லாம் இளைஞர் அணியினர் மட்டுமே வைக்கும் வரவேற்பு பேனர்களில் கருணாநிதி மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு இணையாக உதயநிதியின் போட்டோவை அச்சிட்டனர். ஆனால் இப்போது மாவட்ட அளவில் நடைபெறும் எந்தவொரு நிகழ்ச்சி என்றாலும் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவருடைய படங்களும் தான் பெரிய அளவில் காணப்படுகிறது. பெரியார், அண்ணா ஆகியோருடன் கருணாநிதியின் படம் சிறிய அளவாக சுருக்கம் கண்டுவிட்டது. உதயநிதி செல்லும் இடங்களில் எல்லாம் பிரமாண்ட போஸ்டர்கள் இடம் பெறுவதை காண முடிகிறது.

ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது உதயநிதி ஸ்டாலின் அரசியலில் பக்குவம் அடைந்துவிட்ட காரணத்தால் அவரை தலைவருக்கு இணையான அந்தஸ்தில் வைத்து மாவட்டச் செயலாளர்கள் அணுகி வருகின்றனர். அதற்கேற்ப அவரது அணுகுமுறையும் மாறியுள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 40-ல் 10 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கிவிட்டு 30 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை உதயநிதிதான் தீர்மானிப்பார் என தெரிகிறது.

அதிலும் இளைஞரணியில் இருந்து 5 பேரை வேட்பாளராக நிறுத்துவதற்கு பரிந்துரைப்பார் என்றும் கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. எந்தெந்த ஊர்களில் இளைஞரணி நிர்வாகிகள் கட்சிக்காக திறமையாக உழைக்கிறார்களோ, அவர்களை தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பார் என்றும் தகவல்கள் வருகின்றன.

இதன் காரணமாக இப்போதே மூத்த அமைச்சர்களும், முன்னணி தலைவர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது வாரிசுகளுக்கு எம்.பி. சீட்டு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் காய் நகர்த்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘சீட்’ கொடுக்க முன்வந்தாலும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரிடம் ஒவ்வொருவரும் மிக பவ்வியமாக நடந்து கொள்வதை காண முடிகிறது.