X

பாராளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் வெற்றி பெற வேண்டும் – டாக்டர் அன்புமணி பேச்சு

தருமபுரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் தருமபுரி மேற்கு மாவட்டத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்தில் மேற்கு மாவட்ட பா.மக. செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும், பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

இந்தியாவிலேயே தமிழகத்தில் 4 இட ஒதுக்கீடுகளையும் இந்திய அளவில் 2 இட ஒதுக்கீடுகளையும் மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை பெற்று தந்த ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சியாகும். பாராளுமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. போட்டியிடுகிறது.

நாம் அனைவரும் களத்தில் இறங்கி திட்டமிட்டு பணியாற்றி பா.ம.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தருமபுரி தொகுதி தமிழகத்திலேயே பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை என நிரூபித்து வெற்றி கண்டுள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திட்டமிட்டு பிரசாரம் செய்து களப்பணி ஆற்றி திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து பா.ம.க.வின் பலத்தை நிரூபிக்க வேண்டும். இளைஞர் சக்தியை கொண்டு நாம் வெற்றி பெற வேண்டும் .

தமிழகத்திலேயே தருமபுரி மாவட்டம் என்னுடைய சொந்த மாவட்டம் தமிழகத்திலேயே முதல் மூன்று வரிசையில் 3-வது இடமாக தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். காவிரி உபரி நீர் திட்டம் குறித்து தற்போதைய முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினிடமும் நேரில் சந்தித்து 10 லட்சத்து 30 ஆயிரம் பேர் கையெழுத்து கையொப்பமிட்ட கடிதத்தை வழங்கினேன். அவர் பார்க்கலாம் என்று கூறிவிட்டார்.

தருமபுரி மாவட்டத்திற்கு ஒரே ஒரு திட்டமான ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை மட்டும் கொண்டு வந்தால் போதும் மாவட்டம் குடிநீர் பிரச்சனை விவசாயம் வேலைவாய்ப்பு அனைத்தையும் பெற்று விடும். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை அறிவித்தார். அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டம் நின்றுவிட்டது.

தருமபுரி மாவட்டம் மக்களின் நலனில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கு அக்கறை இல்லை பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் தான் உடனே நிறைவேற்றப்படும். நிச்சயமாக நடக்கும். தருமபுரி மாவட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு தேவைகளை நிச்சயமாக ராமதாஸ் அவர்கள் நிறைவேற்றுவார்.

நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பாராளுமன்றத் தேர்தல் செமி பைனல் என்றால் சட்டமன்றத் தேர்தல் பைனல் போட்டி ஆகும் என தெரிவித்தார். தருமபுரியில் இருந்து மொரப்பூர் வரை புதிய ரெயில் பாதை திட்டம் நிறைவேற்ற 19 முறை மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பலமுறை வலியுறுத்தி இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags: tamil news