பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் – அண்ணாமலை பேச்சு
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் தமிழக பா.ஜ.க. கலை, கலாசார பிரிவு சார்பில் தமிழ்த்தாய் விருது வழங்கும் விழா நடந்தது. கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் பெப்சி சிவா தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்துகொண்டு, பழம்பெரும் நடிகர்-நடிகைகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
விழாவுக்குப் பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
செய்யக்கூடிய வேலையில் நேர்மை இருந்தால் வெற்றி கிடைக்கும். கலைஞன், படைப்பாளி ஆகியோர் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள். பா.ஜ.க.வை தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச்செல்வோம். பா.ஜ.க. தமிழர்களுக்கான கட்சி. தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காக இருக்கக்கூடிய முதன்மை கட்சி பா.ஜ.க.தான். தொடர்ந்து மக்களுக்காக உழைத்துக்கொண்டிருப்போம்.
சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பெண் போலீசாரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அக்கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று முதல்-அமைச்சருக்கு திருமாவளவன் முதலில் ‘டுவிட்’ செய்யவேண்டும். பெண் போலீஸ் மீது கை வைத்த 2 இளைஞர்களிடம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மன்னிப்பு எழுதி கடிதம் வாங்கினர். நடவடிக்கை எடுக்கவேண்டாம் என பெண் போலீசிடமும் கடிதம் எழுதி வாங்கியுள்ளனர்.
இந்தியாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் எங்கும் நடைபெறாது. பாதிக்கப்பட்ட பெண் போலீசிடமே நடவடிக்கை எடுக்கவேண்டாம் என கடிதம் எழுதி வாங்கியது பற்றி திருமாவளவன் முதல்-அமைச்சரிடம் கேள்வி எழுப்பவேண்டும். பாதிக்கப்பட்ட பெண் போலீசுக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களுக்கு என்ன நிலை என்பதை முதல்-அமைச்சர் சொல்லவேண்டும்.
பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சுமுகமாக செல்வதால், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. உடன்தான் கூட்டணி. தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு.
வருகிற பாராளுமன்ற தேர்தல் எங்களுக்கும், எங்கள் கூட்டணி கட்சிக்கும் மைல்கல்லாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் நடிகர் பாக்யராஜ், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், எஸ்.சி.சூர்யா, பிரமிளா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.