Tamilசெய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது-

அ.தி.மு.க. வலுவாக இருப்பதற்கு காரணமே மக்களுடைய பெரும் ஆதரவு தான். அதனால் இன்றைக்கு அ.தி.மு.க.வை எவராலும் வீழ்த்த முடியவில்லை. எத்தனையோ பேர் இந்த கட்சியை உடைக்க பார்த்தார்கள். முடக்கப்பார்த்தார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எத்தனையோ அவதாரம் எடுத்து அ.தி.மு.க.வை அழிக்கப்பார்த்தார். அத்தனை அவதாரத்தையும் தவிடு பொடியாக்கிய கட்சி அ.தி.மு.க. தான். மக்கள்தான் அ.தி.மு.க.வை இயக்குகிறார்கள்.

அ.தி.மு.கவை பொறுத்தவரைக்கும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சி. இதற்காக எங்களது தொண்டர்கள், நிர்வாகிகள் உழைப்பார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் வாய்ப்பு இருப்பதாக நாட்டு மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய எண்ணமெல்லாம் இந்த தி.மு.க. ஆட்சி எப்போது போகும் என்பதுதான். யாரை கேட்டாலும் இப்படித்தான் சொல்கிறார்கள். தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப கிராமம் முதல் நகரம் வரை வசிக்கும் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 இடங்களில் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படுகின்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் நீங்கள் சொன்ன எந்த திட்டமாவது நிறைவேற்றி இருக்கிறீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தை நிறைவேற்றி கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு தான் அடிக்கல் நாட்டுகிறார்கள்.

லஞ்சம் வாங்குவதில் முதன்மை தி.மு.க. அரசாக உள்ளது. கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் இதுதான் இந்த ஆட்சியில் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். முதன்மை முதன்மை என்று தி.மு.க. சொல்வது லஞ்சம் வாங்குவதை தான் முதன்மை என்று சொல்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பொதுக்குழு கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து பார்க்கின்றபோது ஏதாவது நடந்து விடுமோ என அச்சத்தில் தேடி பார்க்கிறேன் என்கிறார். அப்படினா அவருடைய நிலைமை பரிதாபமாக உள்ளது. அவர் கட்சிக்காரரை பார்த்து பயப்படுகின்றார். ஏனென்றால் தினந்தோறும் ஊடகங்களில் வருகின்ற செய்தியே தி.மு.க.காரர்கள் செய்கின்ற பிரச்சினை தான். அதை பார்த்து பயந்து நடுங்கி காலையில் எழுகின்றபோது எதுவுமே நடக்கக்கூடாது என வேண்டுகின்றேன், என அவரே கூறுகிறார். கட்சிக்காரர்களை பார்த்து பயப்படுகின்ற நிலைமைக்கு இன்று தி.மு.க. தலைவர் போய்விட்டார்.

5 மாத காலத்திற்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதிகாரியாக இருப்பேன் என சொன்னார். ஒழுங்காக கட்சியில் பணி செய்யவில்லை என்றால் யாராக இருந்தாலும் பார்க்க மாட்டேன். கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என சொன்ன அதே மு.க.ஸ்டாலின் இன்று கட்சியினர் மத்தியில் கெஞ்சுகின்ற நிலைமையை பார்க்கின்றோம். ஆகவே திறமை இல்லாத முதல்-அமைச்சர் நாட்டை ஆளுகின்றார். நான் முதல்-அமைச்சராக இருந்தபோது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் நிவாரணம் அளித்தேன். கொரோனா தொற்றின்போது சிறப்பாக செயல்பட்டோம். டாக்டர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளித்து விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றிய அரசாங்கம் அ.தி.மு.க. அரசாங்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.