இந்திய பாராளுமன்ற வளாகத்துக்குள் கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி காலை 11.30 மணியளவில் ஐந்து பயங்கரவாதிகள் திடீரென காருடன் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அப்போது பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் சுதாரித்துக் கொண்டு உடனடியாக பதிலடி கொடுத்தனர். இதில் ஐந்து பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இருந்தாலும், எட்டு பாதுகாப்புப்படையினர் மற்றும் ஒரு தோட்டக்காரர் என ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் ஜனநாயகம் என்று கருதப்படும் பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியது பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், பாராளுமன்ற தாக்குதல் தினத்தை முன்னிட்டு, இன்று பாராளுமன்றத்தில் வீரமரணம் அடைந்த வீரர்கள் படத்திற்கு மலர்தூவி இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு இந்த நாளில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான பாராளுமன்றத்தை கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக பாதுகாத்து உயிர் தியாகம் செய்த துணிச்சலான பாதுகாப்புப்படை வீரர்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவர்களின் உன்னத தியாகத்திற்கு தேசம் என்றென்றும் நன்றியுடன் இருக்கும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.