Tamilசெய்திகள்

பாராளுமன்ற சபாநாயகர் ஆகும் என்.டி.ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி

தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமராக நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் நேற்று பதவி ஏற்றனர்.

சந்திரபாபு நாயுடு தனது கட்சிக்கு 5 மந்திரி பதவியும், 1 சபாநாயகர் பதவியும் வழங்க வேண்டும் என பா.ஜ.க.விடம் வலியுறுத்தி வந்தார். ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு 2 மந்திரி பதவிகளை பா.ஜ.க. வழங்கியது. சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியதின்படி. அவரது மனைவியின் சகோதரியும் பா.ஜ.க. மாநில தலைவரான புரந்தேஸ்வரிக்கு சபாநாயகர் பதவி வழங்க பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளது.

சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் முதல் மந்திரியாக பதவி ஏற்று கொள்கிறார். அவரது பதவி ஏற்பு விழாவிற்கு பிறகு புரந்தேஸ்வரி இன்னும் சில நாட்களில் சபாநாயகராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. புரந்தேஸ்வரியை சபாநாயகராக தேர்ந்தெடுத்தால் ஆந்திரா மாநிலம் மேலும் வளர்ச்சி பெறும் என கூறப்படுகிறது.

ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான நடிகர் என்.டி.ராமராவின் மகள். என்டி ராமராவ் மகளும், புரந்தேஸ்வரியின் சகோதரிமான புவனேஸ்வரியை சந்திரபாபு திருமணம் செய்து கொண்டார். என.டி.ராமராவின் மறைவுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி தலைவரானார். ஆந்திர அரசியலில் கால் பதிக்க நினைத்த புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து மந்திரி, எம்.பி பதவிகளை வகித்தார். 2004-ம் ஆண்டு பாபட்லா எம்.பி.யாகவும், 2009-ம் ஆண்டு விசாகப்பட்டினம் எம்.பி.யாகவும் பணியாற்றினார்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி எந்த கட்சியிலும் சேராமல் இருந்தார். இந்த நிலையில் ஆந்திராவில் பா.ஜ.க. கால் பதிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்தபோது கட்சி மேலிடம் புரந்தேஸ்வரியை மாநில தலைவராக அறிவித்தது. புரந்தேஸ்வரி மாநில தலைவராக பதவி ஏற்ற பிறகு கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இவரது நடவடிக்கையால் ஆந்திராவில் பா.ஜ.க. அபார வளர்ச்சி அடைந்தது.

நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. புரந்தேஸ்வரி ராஜமுந்திரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பா.ஜ.க. 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 8 சட்டமன்ற தொகுதிகளையும், 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது.