பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. கட்சி தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்றாலும், பாரம்பரியமிக்க தனது சொந்த தொகுதியான அமேதியில் தோல்வியைத் தழுவினார். 18 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைக்கூட கைப்பற்றவில்லை.
இந்த தோல்விக்கு காரணம் என்ன என்று ஆராய்வதற்கு காங்கிரஸ் காரிய கமிட்டி மே மாதம் 25-ந்தேதி டெல்லியில் கூடியது. அதில், தோல்விக்கு பொறுப்பேற்று தான் பதவி விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்து குண்டைத் தூக்கிப்போட்டார். ஆனால் காரிய கமிட்டி அதை ஏற்க மறுத்ததுடன், கட்சி அமைப்பினை முழுமையாய் மாற்றி அமைக்க வசதியாக ராகுல் காந்திக்கு அங்கீகாரம் அளித்து தீர்மானமும் நிறைவேற்றியது. ஆனால் ராகுல் காந்தி அசைந்து கொடுக்கவில்லை.
அவரது ராஜினாமா முடிவை வாபஸ் பெற வைப்பதற்கு மூத்த தலைவர்கள் அயராது முயற்சி எடுத்தாலும், அது வெற்றி பெறவில்லை. தனது முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார்.
தலைவர் இல்லாததால் கேப்டன் இல்லாத கப்பல் போல காங்கிரஸ் கட்சி தடுமாற்றத்தில் உள்ளது.
இதற்கிடையே பிரியங்கா காந்தியை புதிய தலைவர் ஆக்க வேண்டும், அவரது செல்வாக்கை, மக்களை கவர்ந்திழுக்கும் ஆற்றலைப் பயன்படுத்தித்தான் காங்கிரஸ் கப்பல் கரை சேர முடியும் என்று மூத்த தலைவர்கள் பலரும் கருதுகின்றனர். அதற்கான முயற்சி ஒரு பக்கம் நடந்து வருகிறது.
ஆனாலும் இது பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் பிரியங்கா தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். இந்த மவுனம் சம்மதத்துக்கு அறிகுறியா அல்லது மறுப்பின் அடையாளமா என தெரியாமல் காங்கிரஸ் தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் மூத்த தலைவர்கள் ரன்தீப் சுர்ஜிவாலா, பி.எல். புனியா, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டவர்கள் நேற்று டெல்லியில் கூடிப்பேசினர்.
அதன்பின்னர் ரன்தீப் சுர்ஜிவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “காங்கிரஸ் காரிய கமிட்டி, நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் கூடுகிறது. ஆனால் அதற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேதி முடிவானதும் தெரிவிக்கப்படும்” என கூறினார்.
காங்கிரசின் அதிகாரமிக்க அமைப்பு காரிய கமிட்டிதான்.
எனவே காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. பல மூத்த தலைவர்கள் பெயர்கள் அடிபட்டு வந்த வேளையில் இப்போது பிரியங்கா பெயர் பலமாக அடிபடுவது குறிப்பிடத்தக்கது.