Tamilசெய்திகள்

பாராளுமன்ற கூட்டத்தொடர் 11ஆம் தேதி தொடங்குகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 11-ந் தேதி தொடங்குகிறது. சபையை சுமுகமாக நடத்துவது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக, 10-ந் தேதி, அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடப்பதால், தற்போதைய மக்களவையின் முழுமையான கடைசி கூட்டத்தொடர் இதுவே ஆகும். எனவே, இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமான, சுமுகமான கூட்டத்தொடராக நடப்பதை உறுதி செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரும்புகிறது.

கடந்த காலங்களில், எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கின. அதனால், ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் பல நாட்கள் வீணாக போய்விட்டன. இந்த கூட்டத்தொடரில் அத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்று இரு அவைகளின் தலைவர்களும் கருதுகிறார்கள்.

எனவே, சபையை சுமுகமாக நடத்துவதற்காக, அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். கூட்டத்தொடருக்கு முந்தைய நாளான 10-ந் தேதி, இந்த கூட்டம் நடக்கிறது.

அதுபோல், பாராளுமன்ற மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவதற்காக, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் அந்த சபையின் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு 10-ந் தேதி ஏற்பாடு செய்துள்ளார். டெல்லியில் அவரது வீட்டில் இந்த கூட்டம் நடக்கிறது.

அவை முன்னவரும், மத்திய நிதி மந்திரியுமான அருண் ஜெட்லி, எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அதில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. சபையை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்த வெங்கையா நாயுடு முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘உடனடி முத்தலாக்’ நடைமுறையை ஒழிக்கும்வகையில், அதை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் மசோதா, மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது. மாநிலங்களவையில் அது நிலுவையில் உள்ளது. அங்கும் மசோதாவை நிறைவேற்ற இந்த தொடரில் மத்திய அரசு முயற்சிக்கும் என்று தெரிகிறது. அதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குமா? என்பது அப்போது தெரியவரும்.

இந்த குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே தொடங்குகிறது. சமீபத்தில், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.

ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில், வருகிற 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. மேற்கண்ட 5 மாநிலங்களிலும் 11-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்றைய தினமே முடிவுகள் முழுமையாக வெளியாகி விடும் என்பதால், அம்மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது தெரிந்துவிடும்.

இந்த தேர்தல் முடிவுகள், குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் பணியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். அப்படி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் முதலாவது ஆலோசனை கூட்டம், 10-ந் தேதி டெல்லியில் நடக்கிறது.

அந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ், சமாஜ்வாடி கட்சி சார்பில் ராம்கோபால் யாதவ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

இந்த கூட்டத்தில், பா.ஜனதாவுக்கு எதிரான ‘மெகா கூட்டணி’யை எந்தவகையில் வடிவமைப்பது என்பது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. பல்வேறு முக்கிய பிரச்சினைகளில், மோடி அரசை எதிர்கொள்வதற்கான செயல் திட்டம் வகுக்கப்படும் என்றும் தெரிகிறது. இந்த கட்சிகளிடையே நாடாளுமன்றத்திலும் ஒருங்கிணைப்பு இருக்கும் என்பதால், கூட்டத்தொடரில் அது எதிரொலிக்கும்.

பா.ஜனதா அரசை முழுமையாக எதிர்கொள்ள இதுவே கடைசி வாய்ப்பு என்பதால், இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முழு பலத்துடன் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.

ரபேல் விமான ஒப்பந்தம், முத்தலாக் மசோதா, ரிசர்வ் வங்கி-மத்திய அரசு மோதல், சி.பி.ஐ. இயக்குனர்கள் நீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதால், குளிர்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *