பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி, கடந்த மே மாத இறுதியில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. புதிய ஆட்சியில் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியில், காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலங்களை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு தனது நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது.

மேலும், இந்த கூட்டத்தொடரில் ‘முத்தலாக்’ தடை மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக சமீப காலத்தில் இல்லாத வகையில் மக்களவையில் 35 மசோதாக்களும், மாநிலங்களவையில் 32 மசோதாக்களும், இரு சபைகளிலும் 30 மசோதாக்களும் நிறைவேறின.

இந்த நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் தற்போதைய எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ்குப்தா, ஜெகநாத் மிஷ்ரா, சுக்தேவ் சிங் லிப்ரா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதன் நீண்ட கால கூட்டணி கட்சியான சிவசேனா விலகிய பின்னர் நடக்கும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். இந்த கூட்டத்தொடர், பாரதீய ஜனதா கட்சிக்கு பெரும் சவாலாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், காஷ்மீர் மாநில பிரிவினைக்கு பின்னர் அங்கு தொடர்ந்து அரசியல் தலைவர்கள் சிறைவைப்பு, மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்திய விவகாரம், பிரியங்கா காந்தி செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம், விவசாயிகள் தற்கொலை என பல பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் அரசுத் தரப்பு பதில் சொல்வதற்கு தயாராக உள்ளது. இதனால் இந்த கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும். டிசம்பர் 13-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools