பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக்கூடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்தநிலையில் இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யமுடியும். தேர்தலுக்கு பின்னர் அமையும் புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இருப்பினும் இந்த இடைக்கால பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு துறையினருடன் கருத்துகள் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் பட்ஜெட் தயாரிப்பு பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பே மத்திய நிதி அமைச்சகம் தொடங்கிவிட்டது.

பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. அன்றைய தினம் மத்திய நிதி அமைச்சக அலுவலகத்தில், அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து இடைக்கால பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சக அலுவலகத்தில் இறுதிக்கட்ட தயாரிப்பு நிகழ்ச்சியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரிகள் பங்கஜ் சவுத்ரி, பகவத் கரத் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் மட்டுமே 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா சீதாராமன் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள் எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. ஆனால் இது மத்திய அரசின் வரவு மற்றும் செலவு திட்டங்களுக்கான அறிக்கையாகவே இருக்கும். புதிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news