குடியுரிமை சட்ட திருத்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை மேல்சபையில் இன்று தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் ஆளும் பா.ஜனதா கூட்டணிக்கு போதுமான உறுப்பினர்கள் இருந்ததால் இந்த மசோதா எளிதாக நிறைவேறியது.
பாராளுமன்ற மேல்சபை இன்று கூடியதும் எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி முழக்கமிட்டன.
இதேபோல் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. வருவாயை வழங்குவதில் தாமதம் செய்வதை கண்டித்து தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு பலமுறை அவை தலைவர் எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் அமளி நீடித்தது. இதனால் சபையை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து மேல்சபை தலைவர் வெங்கையா நாயுடு 12 மணி வரை அவையை ஒத்தி வைத்தார்.
அதன்பின்னர் அவை கூடிய போது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து பாராளுமன்ற மக்களவையில் அமித்ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பை நிறுத்துமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.