X

பாராட்டு எல்லாம் ஜோரூட்டை சாரும் – வேகப் பந்து வீச்சாளர் பும்ரா

சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

இங்கிலாந்து அணி 3 விக்கெட்டை மட்டுமே இழந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் திணறினார்கள். 89.3 ஓவர் வரை வீசி 3 விக்கெட்தான் எடுக்க முடிந்தது.

சேப்பாக்கம் ஆடுகளம் தொடக்கத்தில் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருக்கும். இதனால் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றுவது மிகவும் கடினமானது.

கொரோனா பாதிப்பு காலம் என்பதால் கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பந்தை பளபளக்க செய்வதற்காக வீரர்கள் எச்சிலை பயன்படுத்துவார்கள்.

பந்து நன்றாக பளபளப்பாக மாறினால் மட்டுமே வேகப்பந்து வீரர்களால் பந்தை சுவிங் செய்ய முடியும். கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பந்தில் எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பந்தில் எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் ரிவர்ஸ் சுவிங் செய்வது பாதிக்கப்பட்டது என்று இந்திய அணி வேகப்பந்து வீரர் பும்ரா கூறுகிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஆடுகளம் சமநிலையாக இருந்தது. புதிய விதிமுறையால் பந்தை பளபளக்க செய்ய முடியவில்லை. இதனால் பந்தை ரிவர்ஸ் சுவிங் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டோம். கொரோனா காலம் என்பதால் இந்த விதிமுறை சரியானது.

ஜோரூட் சிறப்பாக ஆடினார். சுழற்பந்தை அபாரமாக எதிர்கொண்டார். இலங்கையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இங்கும் அதே திறமையுடன் ஆடினார்.

பாராட்டு எல்லாம் ஜோரூட்டை சாரும். அவர் சிறந்த இன்னிங்சை ஆடினார்.

இவ்வாறு பும்ரா கூறியுள்ளார்.

பும்ரா நேற்றுதான் முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்டில் விளையாடினார். அவரது 17 டெஸ்டும், வெளிநாட்டு மைதானத்தில் தான் நடந்தது. 18-வது டெஸ்டில்தான் சொந்த மண்ணில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் நேற்று 18.3 ஓவர்கள் வீசி 40 ரன் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.