‘பாரம்’ படத்திற்காக போஸ்டர் ஒட்ட முடிவு செய்த இயக்குநர் மிஷ்கின்
இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பாரம்’. தேசிய விருது பெற்ற இப்படத்தை இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வெளியிடுகிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர்கள் ராம், மிஷ்கின், வெற்றிமாறன் ஆகியோ கலந்து கொண்டனர்.
இதில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது: இயக்குநர் ராம் போனில் அழைத்து நாம் செய்ய ஆசைப்படும் படத்தை ஒருவர் எடுத்திருக்கிறார், வந்து பாருங்கள் என்றார். சரி பார்க்கலாம் என்று போனேன். ராம் சொன்னால் நல்லாருக்குமே என்று நினைத்து போய் பார்த்தால் இயக்குநரை பார்த்தவுடன் இந்தப்படம் நல்லாருக்காது என்று முடிவு செய்து விட்டேன். இவர் என்ன படம் எடுத்து விடுவார் என்று நினைத்தேன்.
ஒரு கலைஞனின் வாழ்க்கையே எதிர்பார்ப்பில் தான் இருக்கிறது. தலைவலியுடன் தான் இந்தப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்த்தபோது என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது. நான் என்ன படம் எடுக்கிறேன் என கூச்சமாக இருந்தது. படம் பார்த்தவுடன் என் அம்மா அப்பா ஞாபகம் வந்து விட்டது. அவர்களை பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது. என் தந்தை தான் எனக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியவர்.
அவரை பார்த்து கொள்வதை மறந்து விட்டேன். நம் அம்மா அப்பாவை பார்த்து கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் படம் இது. நாங்கள் சொல்வதால் அல்ல உண்மையில் இந்தப்படம் ஒரு சத்தியம். வாழ்வை வாழச்சொல்லி கொடுக்கும் படம். இந்திய சினிமாவில் முதல் மூன்று இடங்களில் இந்தப்படம் இருக்கும். அன்பை சொல்லும் படம். இந்த நாடும் நகரங்களும் நம்மை அம்மா அப்பாவை விட்டு பிரிக்கிறது. நாம் நகரத்தை நோக்கி நகர்ந்து விட்டோம்.
நமக்கு பல பாடங்களை சொல்லி தரும் படம். இந்தப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஆறு ஏழு நகரங்களில் இந்தப்படத்தின் போஸ்டரை என் செலவில் ஒட்டப்போகிறேன். இது இந்தப்படத்திற்கு எனது நன்றிக்கடன். இந்தப்படம் என்னை மாற்றியது. இந்தப்படத்தை பாருங்கள் உங்கள் அம்மா அப்பாவை நேசிப்பீர்கள்.
இவ்வாறூ அவர் கூறினார்.