Tamilசெய்திகள்

பாரதீய ஜனதாவால் இயக்கப்படும் கிரண்பேடியும் ஒரு சங்கிதான் – திருமாவளவன் பேச்சு

கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் புதுவை அண்ணா சிலை அருகே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று 2-வது நாள் போராட்டத்தின்போது விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுவை கவர்னர் கிரண்பேடி மக்களுக்கு எதிராக உள்ளார். அவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும், அரசாணை பிறப்பித்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். நாட்டுக்கு கவர்னர் பதவியே தேவையில்லை என்பதுதான் இங்குள்ள அனைவரின் கருத்து. இந்தியா முழுவதும் அந்த பதவியை காலி செய்யவேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் இருந்தும் அரசின் திட்டங்களை தடுக்கிறார். மக்கள் முதல்-அமைச்சரைத்தான் கேள்வி கேட்பார்கள். கவர்னரை கேட்கமாட்டார்கள். தனிப்பட்ட நபருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி டெல்லியிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்.

அன்னாஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்தான் இந்த கிரண்பேடி. இவர் ஊழலுக்கு எதிரானவர், நேர்மையான அதிகாரி போன்ற தோற்றத்தை உருவாக்கி நாடகம் நடத்தினார். ஆர்.எஸ்.எஸ். கும்பலால் தூண்டிவிடப்பட்டு கட்சி சார்பற்றவராக வெளிக்காட்டினார்.

நாட்டில் இப்போது ஊழல் நடக்கவில்லையா? அன்னாஹசாரே இப்போது எங்கு போனார்? நாட்டு மக்களை ஏமாற்றும் மோசடி பேர்வழிகள் இவர்கள். பாரதீய ஜனதாவால் இயக்கப்படும் கிரண்பேடியும் ஒரு சங்கிதான்.

நாட்டிலேயே உயர்ந்த சிலையை பட்டேலுக்கு வைத்தார்கள். பட்டேல் ஒரு காங்கிரஸ்காரர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்தவர். நேருவுடன் மிக நெருங்கிய தொடர்புடையவர். காந்தியின் புகழை மறைக்க பாரதீய ஜனதா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காந்தியை சுட்டுக்கொன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான். அவர்கள்தான் இப்போது நாட்டை ஆள்கின்றனர்.

ஆளும் அரசின் முடிவுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவேண்டும். ஆனால் அவர் ஒப்புதல் அளிப்பதில்லை. அரசுக்கு இடையூறு, நெருக்கடி தருகிறார். கவர்னரின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்ததான் இந்த போராட்டம். நாம் போராடுவதால் கவர்னரை திரும்பப்பெறுவார்களா? என்பது நிச்சயமில்லை.

இந்தியாவில் பெரும்பான்மை சமூகம் இந்துக்கள்தான். காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க., அ.தி.மு.க., விடுதலை சிறுத்ததைகள், விவசாயிகள் என அனைத்திலும் இந்துக்கள்தான் அதிகம் உள்ளனர். ஆனால் நாம் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். வேளாண் சட்டங்களால், நீட் தேர்வினால், சரக்கு மற்றும் சேவை வரியினால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் இந்துக்கள்தான்.

முருகன் தமிழ்க்கடவுகள் என்கிறார்கள். அவரது அண்ணன் விநாயகர் தமிழ் கடவுள் இல்லையா? அவர்களை பெற்ற சிவன், பார்வதி தமிழ் கடவுள்கள் இல்லையா? பாரதீய ஜனதா கட்சியினர் கடவுள் பெயரை சொல்லி அரசியல் நடத்துகிறார்கள். மக்களை சாதி, மதங்களின் பெயரால் பிரிப்பதுதான் அவர்களது வேலை. இந்து தேசம் என்று கூறி மதவெறியை தூண்டுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.