பாம்பை வைத்து நாடகம் ஆடிய பெண் சாமியார் கைது!
வாலாஜாபாத் வெள்ளரி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கபிலா. பட்டதாரியான இவர் பத்திரகாளி அம்மனுக்கு கோவில் கட்டி பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார்.
இவரது கோவில் கும்பாபிஷேகத்தின்போது நல்ல பாம்புகளை கொண்டு சர்ப்ப சாந்தி என்னும் நாக பூஜை நடந்தது.
அப்போது பாம்பை கழுத்தில் சுற்றியபடி அருள் வாக்கு கூறியிருக்கிறார்.
தற்போது பாம்புடன் இருக்கும் கபிலாவின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் பாம்புகளை பிடித்து வைத்திருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலர் நாக சதீஷ் கிரிஜா லாவுக்கு புகார் வந்தது.
அவரது உத்தரவுப்படி செங்கல்பட்டு வன சரகர் பாண்டுரங்கன் தலைமையிலான வனத்துறையினர் சாமியார் கபிலாவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் வன விலங்குகள் மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கபிலாவை வனத்துறையினர் கைது செய்தனர்.
எனக்கு 1999-ம் ஆண்டு சாமி அருள் வந்தது. 2000-ம் ஆண்டு கோவில் கட்டினேன். 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 2018-ம் ஆண்டு 2-வது கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது சர்பசாந்தி பூஜைக்காக நாகத்தை கொண்டு வர செய்தோம். பூஜையின் போது பாம்பை கண்டு நானே பயந்தேன்.
சாமியின் அருள் வந்தபோது அம்மனே பாம்பை வாங்கி இருக்கிறார். அம்மன் கேட்டதால்தான் எனது கழுத்தில் பாம்பை சுற்றி உள்ளனர்.
பாம்பை வைத்து பூஜை செய்தது தவறு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் பாம்பை கொண்டு வரவில்லை. பூஜைக்காக மட்டுமே பாம்பை வரவழைத்தோம்.
எனது பெயரை கெடுப்பதற்காக யாரோ தவறுதலாக இந்த வேலையை செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவிலை விளம்பரப்படுத்துவதற்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும் பாம்புடன் உள்ள வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர்.
வன விலங்கு தடுப்பு சட்டத்தில் நல்ல பாம்பு உள்ளது. அதனை காட்சிப்படுத்துவதோ, வணிக ரீதியாக பயன்படுத்துவதோ தடை செய்யப்பட்டுள்ளது. இது அபராதம் விதிக்கக் கூடிய குற்றம் அல்ல. நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கக்கூடிய குற்றம். எனவே பெண் சாமி கபிலா கைது செய்யப்பட்டுள்ளார்’ என்றனர்.