இங்கிலாந்து நாட்டில் உள்ள யூனிவர்சிட்டி ஆப் ரீடிங்கில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சக்தி வையாபுரி. இவர் பாம்புக்கடி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். கோவையில் வசிக்கும் தனது பெற்றோரை பார்ப்பதற்காக வந்த பேராசிரியர் சக்தி வையாபுரி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பாம்புக்கடி முக்கிய பிரச்சினையாக உள்ளது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் பாம்புக்கடியால் 50 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். இதில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள்.
இந்தியாவில் பாம்புக்கடியால் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் உயிர் இழக்கிறார்கள். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறாததால் பல பாம்புக்கடி நிகழ்வுகள் பதிவு செய்யப்படுவதில்லை. எங்கள் ஆய்வின்படி, ஆண்டுதோறும் தமிழகத்தில் மட்டும் பாம்புக்கடியால் 10 ஆயிரம் பேர் இறப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கண்ணாடி விரியன், நாகப்பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன் ஆகிய 4 வகை பாம்புகள் மிகவும் விஷம் உள்ளவை. ஆனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பாம்புகடிக்கு மருந்துகள் இல்லாததால் பலர் உயிரிழக்கிறார்கள்.
கிராமப்புறங்களில் தான் பாம்புக்கடியால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து இல்லாததால் சிகிச்சைக்காக நீண்ட தூரம் பயணம் செய்வதாலும் பலர் இறக்கிறார்கள்.
பாம்பு கடித்தால் என்ன பாம்பு கடித்தது?, விஷம் உடலில் ஏறியிருக்கிறதா? என்பதை அறிய ஒரு கருவியை கண்டுபிடித்து உள்ளோம். ரூ.200 முதல் ரூ.300 வரை விலையுள்ள அந்த கருவி அளவில் சிறியதாக இருக்கும். அது இன்னும் ஒரு ஆண்டில் வெளிவர உள்ளது.
அந்த கருவி நடைமுறைக்கு வந்து விட்டால் கிராமப்புற மக்களுக்கு மிகவும் பலன் உள்ளதாக இருக்கும். மேலும் பாம்புக்கடிக்கான மருந்து பற்றியும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.பாம்புக்கடி பற்றிய விழிப்புணர்வு மற்றும் முதலுதவி இல்லாததாலும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். எனவே கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாம்புக்கடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.