Tamilசெய்திகள்

பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் – தூண் அமைக்கும் பணி தொடங்கியது

ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில்வே பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. நூற்றாண்டினை கடந்து மிகவும் பழமையான பாலமாக உள்ளதால் பாம்பன் கடலில் புதிதாக ரெயில்வே பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்காக ரூ.250 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு, அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

இந்த நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தன. சோதனை முயற்சியாக பாலம் அமையும் நுழைவு பகுதிகளில் தூண்கள் அமைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் பாம்பன் கடலில் புதிய ரெயில்வே பாலம் கட்டுவதற்கான முதல் தூண் அமைக்கும் பணியானது நேற்று சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதுபற்றி ரெயில்வே உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாம்பன் கடலில் கட்டப்பட உள்ள புதிய ரெயில்வே பாலத்திற்காக தூண் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இரண்டரை கிலோமீட்டர் நீளத்திற்கு அமையும் இ்ந்த பாலத்திற்காக மொத்தம் 333 தூண்கள் கடலில் அமைக்கப்படுகின்றன. அந்த தூண்கள் மீது 99 கர்டர்கள் பொருத்தப்படும். தூண்கள் அமைக்க கடலில் 36 மீட்டர் ஆழம் வரையிலும் துளை போடும் பிரத்தியேக எந்திரம் மூலம் பணிகள் நடக்க உள்ளன.

ஒரே நேரத்தில் 2 ரெயில்கள் செல்லும் வகையில் இருவழிப்பாதை பாலமாகவே கட்டப்படும். 2 ஆண்டுகளில் புதிய ரெயில்வே பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பாலத்தின் மைய பகுதியில் 77 மீட்டர் நீளத்தில் ஒரே இணைப்பில் தூக்குப்பாலம் அமைக்கப்பட இருக்கிறது. அதனை மின்மோட்டார் மூலம் தானாகவே திறந்து மூடும் வகையில் அமைக்க உள்ளோம். தூக்குப்பாலத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு வசதிகளும் இடம் பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *