டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோத காரியங்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி நாடு முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் அமலாக்கத் துறையினர் இணைந்து கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. சோதனையை அடுத்து, கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் முகமது சபீக் பயத் கைது செய்யப்பட்டார். அதே போல், நாடு முழுவதிலும் அந்த அமைப்பைச் சேர்ந்த 106 பேர் கைதானார்கள். அவர்களில் 11 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது. மேலும், கேரளாவில் கைது செய்யப்பட்டவர்களில் 11 பேரிடம் 30-ந்தேதி வரை விசாரணை நடத்த என்.ஐ.ஏ.வுக்கு நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை சில தகவல்களை வெளியிட்டு இருந்தது. தற்போது அமலாக்கத்துறையும் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக லக்னோவில் உள்ள பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதி மன்றத்தில் அளித்த விசாரணை அறிக்கையில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளதாவது:-
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்டவை சட்டவிரோத செயல்பாடுகளுக்கு நிதி திரட்டி அதனை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளது. இது, அந்த அமைப்பின் தலைவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ரூ.120 கோடி வரை வங்கிகளில் டெபாசிட்டாக வைத்துள்ளது. இதில் பெரும் பகுதி ரொக்கமாகவே உள்ளது. சதி நடவடிக்கைகளுக்காக இந்த அமைப்பு சந்தேகத்துக்குரிய நபர்களிடமிருந்து உள் நாட்டிலும், வளைகுடா நாட்டிலுமிருந்து இந்த நிதியை திரட்டி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற பணம் ஹவாலா முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஹவாலா பண பரிமாற்றம் அனைத்தும் அபுதாபியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றுள்ளது. அப்துல் ரசாக் என்ற நிர்வாகி மூலம் இந்த உண்மைகள் தெரிய வந்துள்ளது.
கத்தார் நாட்டில் பணம் திரட்டும் பணிகளை பாப்பு லர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிறுவனங்களில் ஒருவரான பயாத் என்பவர் மேற்கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அப்துல் ரசாக் அபுதாபியில் பணம் திரட்டி உள்ளார். இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
பணம் திரட்டுவதில் மூளையாக செயல்பட்டவர்கள் வளைகுடா நாடுகளில் பல்வேறு வழிகளில் பணம் திரட்டி உள்ளனர். இது தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி கலவரங்களின் பின்புலத்தில் இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளது. மேலும், வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர் குலைப்பதற்காக ஹத்ரா சுக்குச் சென்றபோது 4 பேரை உத்தரபிரதேச காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன், வகுப்புவாத கலவரங்களை தூண்டி, ஒற்றுமையை குலைக்கும் நோக்கத்துடன் உத்தரபிரதேசத்தில் உள்ள பல முக்கிய நபர்கள் மற்றும் முக்கிய இடங்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரிக்கும் பணிகளிலும் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.
தேசத்தின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை சீர் குலைக்கும் வகையில், பிரதமர் மோடியின் பாட்னா வருகையின் போது இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் பயங்கரவாத குழுக்களை உருவாக்க அந்த அமைப்பு திட்டமிட்டிருந்தது.
இவ்வாறு விசாரணை அறிக்கையில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் பணம் தொடர்பான தகவல்களை தெரிவிக்க கைதானவர்கள் மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.