பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க மறுத்த யஷ் – ரசிகர்கள் பாராட்டு
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் சூழலில் அக்ஷய் குமார் சமீபத்தில் பிரபல புகையிலை விளம்பரத்தில் நடித்து இருந்தார். மேலும், இந்த விளம்பரத்தில் ஏற்கனவே பாலிவுட் உலகின் முன்னணி கதாநாயகர்கள் நடித்து இருந்தனர்.
அவர்களுடன் இணைந்து அக்ஷய் குமார் அந்த விளம்பரத்தில் நடித்து இருந்தார். சில காலத்திற்கு முன்பு புகையிலை தொடர்பான விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என கூறியிருந்த சூழலில் அவர் அந்த விளம்பரத்தில் நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவருக்கு எதிராக ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து அக்ஷய் குமார் அந்த விளம்பரத்தில் நடித்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் தற்போது கன்னட நடிகர் கேஜிஎப் புகழ் “யஷ்” புகையிலை விளம்பர படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து யஷ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பான் மசாலாக்கள் மற்றும் அது போன்ற தயாரிப்புகள் மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் தீங்கு விளைவிக்கும் மற்றும் அவற்றின் தாக்கம் உயிருக்கு ஆபத்தானது.
தனது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களின் நலன்களுக்காக தனிப்பட்ட முறையில் மிகவும் இலாபகரமான பான் மசாலா விளம்பர ஒப்பந்தத்தை யஷ் நிராகரித்துள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு யஷ் எடுத்த இந்த முடிவால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதனால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.