X

பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் – நவோமி ஓசாகா சாம்பியன் பட்டம் வென்றார்

பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டி ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, 41-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் அனஸ்டாசியா பாவ்லிசென்கோவாவை சந்தித்தார். 69 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் நவோமி ஒசாகா 6-2, 6-3 என்ற நேர்செட்டில் பாவ்லிசென்கோவாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2016, 2018-ம் ஆண்டுகளில் இந்த போட்டியில் 2-வது இடம் பிடித்த நவோமி ஒசாகா சொந்த மண்ணில் முதல்முறையாக பட்டத்தை வென்றுள்ளார். இந்த ஆண்டில் நவோமி ஒசாகா வென்ற 2-வது பட்டம் இதுவாகும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்று இருந்தார். 2017-ம் ஆண்டில் ஹாங்காங்கில் நடந்த போட்டியில் பாவ்லிசென்கோவாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்த நவோமி ஒசாகா 470 தரவரிசை புள்ளியுடன் ரூ.1 கோடி பரிசு தொகையும் அள்ளினார். 2-வது இடம் பெற்ற பாவ்லிசென்கோவா ரூ.54 லட்சத்தை பரிசாக பெற்றார்.

வெற்றிக்கு பிறகு நவோமி ஒசாகா அளித்த பேட்டியில், ‘இந்த போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற வெறியுடன் இருந்தேன். ஒவ்வொரு புள்ளியை பெறுவதிலும் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த போட்டியில் இருந்து கற்றுக்கொண்டு இருக் கிறேன். இந்த வெற்றி எனது நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

Tags: sports news