பாடல் சத்தத்தை குறைக்கும்படி கூறிய பெண் மீது துப்பாக்கி சூடு – டெல்லியில் பரபரப்பு

தலைநகர் டெல்லியின் சிரஸ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ். இவரது வீட்டில் நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வீட்டில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இரவில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பட்டதற்கு ஹரிசின் அண்டை வீட்டைச் சேர்ந்த ரஞ்ஜு என்ற பெண் எதிர்ப்பு தெரிவித்தார்.

தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்றவாறு ஹரிசிடம் பாடல் சத்தத்தைக் குறைக்கும்படியும், இரவு என்பதால் பாடல் ஒலிபரப்பை நிறுத்தும்படியும் ரஞ்ஜூ கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஸ் தனது நண்பன் அமித் வைத்திருந்த துப்பாக்கியால் ரஞ்ஜூவை நோக்கி சுட்டுள்ளார். இதில், துப்பாக்கி குண்டு ரஞ்ஜூவின் கழுத்தில் பாய்ந்தது. இதனால், ரத்த வெள்ளத்தில் ரஞ்ஜூ சரிந்து விழுந்தார்.

இதையடுத்து, அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ரஞ்ஜூவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிஸ், அவரது நண்பர் அமித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools