Tamilசினிமா

பாடகர் கேகே மரணத்திற்கு இது தான் காரணமா?

பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (வயது 53), கொல்கத்தாவில் மாரடைப்பு காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்தார். இந்தியத் திரையுலகின் பல்துறைப் பாடகர்களில் ஒருவரான கேகே, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது திடீர் மரணம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவரது உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. இவரது மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது மரணத்திற்கு பல்வேறு விஷயங்கள் காரணம் என குற்றசாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக அரங்கத்தில் நிரம்பி வழிந்த கூட்டம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கேகே இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தில் மொத்தமாக 3 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டும்தான் இருக்க முடியும். ஆனால் அவரது நிகழ்ச்சி நடைபெற்ற போது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதாக கூறப்படுகிறது. கட்டுக்கடங்காத கூட்டத்தை கலைப்பதற்காக தீயணைப்பான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரங்கத்தில் அதிக வெப்பம் நிலவியுள்ளது. இதனால் கேகே-வுக்கு அசௌகரியம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அரங்கத்தில் ஏசி வேலை செய்யவில்லை. இது போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் அந்த கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.