பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் டெல்லியை பூர்வீகமாகக் கொண்டு தமிழ், இந்தி உட்பட பல்வேறு முக்கிய மொழித் திரைப்படங்களில் பல நூறு பாடல்களை பாடியுள்ளார். இதனால் அவருக்கு பல மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நேற்று முன் தினம் கொல்கத்தாவில் உள்ள குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அவருடைய திடீர் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனையடுத்து, பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கிருஷ்ணகுமார் குன்னத் மறைவிற்கு சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அன்புள்ள கேகே, என்ன அவசரம் நண்பா, உங்களைப் போன்ற திறமையான பாடகர்களால் தான் வாழ்க்கை இனிமையாகிறது என பதிவிட்டுள்ளார்.