பாகிஸ்தான் வீரர்கள் எங்களை விட நன்றாக விளையாடினார்கள் – கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
ஆசிய கோப்பை டி20 தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளதாவது:
இந்த போட்டி எங்களுக்கு சிறந்த பாடத்தை அளித்துள்ளது. 181 ரன்கள் நல்ல ஸ்கோர் என நான் நினைத்தேன். எந்த மைதானத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும் நீங்கள் 180 ரன்கள் அடித்தால் அது நல்ல ஸ்கோர் என்ற மனநிலையில் இருந்து மாறவேண்டும். இது மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டி என்பது எங்களுக்கு தெரியும்.
பாகிஸ்தான் வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் எங்களை விட சிறப்பாக ஆடினர். ரிஸ்வான் மற்றும் நவாஸ் கூட்டணி நீண்ட நேரம் நீடித்துவிட்டது. இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,விராட் கோலி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் ஆசிப் அலியின் கேட்சை அர்ஷ்தீப்சிங் தவற விட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கோலி, அழுத்தமான சூழ்நிலையின் போது யார் வேண்டுமானலும் தவறு செய்யலாம். மூத்த வீரர்களிடம் நீங்கள் (இளம் வீரர்கள்) கற்றுக்கொள்ளவேண்டும். அப்போது தான், அடுத்த முறை வாய்ப்பு வரும்போது, நீங்கள் இதுபோன்ற முக்கியமான கேட்ச்களை பிடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.