பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறினார். இந்த நிலையில் இன்று வாடகை விமானம் மூலம் சொந்த நாடு திரும்பியுள்ளார்.
73 வயதாகும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவரான ஷெரீப் துபாயில் இருந்து இஸ்லாமாபாத் வந்தடைந்தார். அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள், மூத்த கட்சித் தலைவர்கள், நண்பர்கள் உடன் வந்தனர். முன்னதாக, பாகிஸ்தான் நீதிமன்றம் நவாஸ் ஷெரீப்புக்கு பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைத் தண்டனை விதித்தது.
சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல கோர்ட்டு ஜாமின் வழங்கியது. இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்ற நவாஸ் ஷெரீப், அங்கு சிகிச்சை பெற்றார். ஜாமின் காலம் முடிந்த பிறகும் அவர் பாகிஸ்தான் திரும்பவில்லை. 2019-ம் ஆண்டு முதல் லண்டனிலேயே தங்கிவிட்டார்.
இதற்கிடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது. நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் ஆனார். இதையடுத்து நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, “நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்பார்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பொருளாதார சிக்கலில் பாகிஸ்தான் தவித்து வரும் நிலையிலும், பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையிலும் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பியுள்ளார்.