பாகிஸ்தான் மருத்துவர்களை வெளியேற்றும் சவுதி அரேபியா

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தானில் எம்.எஸ். மற்றும் எம்.டி. போன்ற முதுகலை மருத்துவப்படிப்பின் தரம் மற்றும் பயிற்சி சிறப்பானதாக இல்லை என கூறி அதன் அங்கீகாரத்தை சவுதி அரேபியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானின் முதுகலை மருத்துவ மேற்படிப்பு, சவுதி அரசின் சுகாதார ஆணையத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்புடையதாக அல்ல என்பதால் அங்கு எம்.எஸ்., எம்.டி படித்துவிட்டு சவுதியில் பணியாற்றுபவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சவுதி அரேபியாவின் இந்த அதிரடி முடிவு நூற்றுக்கணக்கான டாக்டர்களை வேலையிழக்க செய்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் சவுதி அரேபியாவில் உள்ளனர்.

எனவே அங்கு இருக்கும் பாகிஸ்தான் டாக்டர்களை உடனடியாக வெளியேறும்படி சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து சுகாதார சிறப்புகளுக்கான சவுதி ஆணையம் (எஸ்.சி.எப்.எச்.எஸ்) அங்குள்ள பாகிஸ்தான் டாக்டர்களுக்கு பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதங்களை அனுப்பி உள்ளன.

அந்த கடிதத்தில் “தொழில்முறை தகுதிக்கான உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. காரணம், எஸ்.சி.எப்.எச்.எஸ் விதிமுறைகளின்படி பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட உங்கள் முதுகலை பட்டம் ஏற்றுக்கொள்ளப் படாது” என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரசின் இந்த நடவடிக்கையில் பாதிக்கப்பட்டு உள்ள அலி உஸ்மான் என்ற பாகிஸ்தான் டாக்டர் இதுகுறித்து கூறுகையில், “லாகூர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 வருடம் மேற்படிப்பு முடித்தேன். அங்குள்ள பொது மருத்துவமனையில் பயிற்சி பெற்றபின் சவுதிக்கு வேலைக்கு வந்தேன். சவுதி சுகாதார அமைச்சகம் எனது ஒப்பந்தத்தை நீக்கியுள்ளது. இந்த நீக்கத்தால் எனது குடும்பம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது” என வருத்தத்துடன் கூறினார்.

மற்றொரு டாக்டர் கூறுகையில், “இந்தியா, எகிப்து, சூடான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகள் வழங்கும் அதே பட்டப்படிப்பு திட்டத்தை தான் பாகிஸ்தானும் வழங்குகிறது. ஆனால் பாகிஸ்தானை மட்டும் புறக்கணிப்பது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.

சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் உடனடியாக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் பாகிஸ்தானில் உள்ள மருத்துவ பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் சவுதி அரேபியாவின் குற்றச்சாட்டை தீர்க்கமாக நிராகரித்து உள்ளனர்.

இதற்கிடையில் சவுதி அரேபியாவை தொடர்ந்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகளும் பாகிஸ்தானில் முதுகலை மருத்துவப்படிப்பு படித்தவர்களை பணியில் இருந்து நீக்கி, உடனடியாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools