பாகிஸ்தான் பைசாகி திருவிழா – 2200 சீக்கியர்களுக்கு விசா வழங்கப்பட்டது

பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பைசாகி திருவிழா மற்றும் அதனை ஒட்டிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் யாத்திரையாக செல்வது வழக்கம். இந்த விழா ஏப்ரல் 12ம் தேதி துவங்கி ஏப்ரல் 21 தேதி வரை நடைபெற உள்ளது.

இதையடுத்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித தலங்களான பஞ்ச சாகிப், நன்கனா சாகிப், மற்றும் கர்தார்பூர் உள்ளிட்ட தலங்களுக்கு சென்று வழிபாடுகள், பூஜைகள் ஆகியவற்றில் சீக்கிய யாத்ரீகர்கள் கலந்துக் கொள்வர்.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானில் நடைபெறும் விழாவிற்கு செல்லவுள்ள 2200 சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசாக்களை வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமானதாகும்.

இது குறித்து பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மங்களகரமான பைசாகி திருவிழாவில் கலந்துக் கொள்ள வரும் அனைத்து சீக்கிய சகோதர , சகோதரிகளையும் பாகிஸ்தான் சார்பாக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இந்த புனிதப்பயணம் யாத்ரீகர்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைய வாழ்த்துகிறோம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools