பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன் சஜித் மிர். இவன் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவன். இவன் தலைக்கு 5 மில்லியன் டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவால் தேடப்படும் சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா ஆதரவுடன் இந்தியா கடந்த செப்டம்பர் மாதம் பரிந்துரையை கொண்டு வந்தது. இதற்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ள சீனா எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் மீண்டும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை இந்தியாவும், அமெரிக்காவும் கொண்டு வந்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 அல்கொய்தா தடைக்குழுவின் கீழ் சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதி என்று கருப்பு பட்டியலில் சேர்த்து அவரது சொத்துக்களை முடக்க வேண்டும் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தை சீனா தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நிறைவேற்ற விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்தியாவின் முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதற்கிடையே சஜித் மிர் இறந்து விட்டதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் அதை இந்தியாவும், அமெரிக்காவும் ஏற்க மறுத்தன. அதன்பின் சஜித் மிர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது அதன்பின் பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கில் சஜித் மிர்ருக்கு 15 ஆண்டுகள் ஜெயில் தண்டனையை பாகிஸ்தான் கோர்ட் விதித்தது.
சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. ஒரு தீவிரவாதியை கருப்பு பட்டியலிட, பல உறுப்பு நாடுகள் ஆதரவளித்தும் அது நடக்கவில்லையென்றால், உலகளாவிய தீவிரவாத எதிர்ப்பிற்கான கட்டமைப்பில் அடிப்படையிலேயே ஏதோ தவறு உள்ளது என நாங்கள் நம்ப வேண்டியிருக்கும் என இந்தியா தெரிவித்திருக்கிறது.
இதுபற்றி அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்த இந்தியா, “உலகின் பல பகுதிகளில் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்ட தீவிரவாதிகளை அற்ப காரணங்களுக்காக ஐ.நா. மூலம் தடைசெய்ய இயலாத நிலை தொடருமென்றால், தீவிரவாத சவால்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் நமக்கு உண்மையான மன உறுதி இல்லையென்றுதான் அர்த்தம்.
பொறுப்பும், வெளிப்படைத்தன்மையும் அதிகரித்து வரும் தற்காலத்தில், காரணங்கள் கூறப்படாமல் ஒரு நியாயமான முன்மொழிவு தடுக்கப்படுவது அனுமதிக்கப்படலாமா? அதேபோன்று, சுய அடையாளங்களை மறைத்து ஒரு சிலர் முன்மொழிவுகள் வைக்கும்போது அதை நாம் அனுமதிக்கலாமா?” என கேள்வி எழுப்பியிருக்கிறது.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் போது “மதங்களை பற்றிய அச்சம்” போன்ற பேச்சுக்கள் இடைச்சொருகலாக நுழைக்கப்படும் போக்கை இந்தியா வன்மையாக சாடியது. ஐ.நா.வின் உலகளாவிய தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பு அனைத்து மதங்களையும் சமமாக நடத்த வேண்டும், மதங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்காமல் சமமாக பார்க்க வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.