X

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க தயங்கும் ஷேன் வாட்சன்

கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிய பிறகு பயிற்சியாளர், கேப்டன் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டனர். அதன் பிறகு அந்த அணிக்கு நிரந்தர தலைமை பயிற்சியாளராக யாரும் நியமிக்கப்படவில்லை. முகமது ஹபீஸ் தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்டார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான ஷேன் வாட்சன் புதிய தலைமை பயிற்சிளாராக நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின.

வாட்சன் தலைமை பயிற்சியாளராக இருக்க இதுவரை யாருக்கும் வழங்காத தொகையாக ஆண்டுக்கு ரூ.16½ கோடி சம்பளமாக கேட்டதாகவும், அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்து விட்டாலும் கூட இறுதி முடிவை எடுக்க வாட்சன் தயங்குவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் அணியினருடன் அதிக நேரம் செலவிட வேண்டியது இருப்பதாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்வதாலும், வாட்சன் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் காலஅவகாசம் எடுத்து கொள்வதாக தெரிகிறது. தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்கான குயட்டா கிளாடியட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக வாட்சன் இருக்கிறார்.