பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக இஞமாம் உல் ஹக் மீண்டும் தேர்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த ஹரூன் ரஷித் கடந்த மாதம் விலகினார். அந்த இடத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக்கின் பெயர் பரிசீலிக்கப்பட்ட நிலையில் நேற்று அந்த பொறுப்பில் அவர் அமர்த்தப்பட்டார்.

2-வது முறையாக தேர்வு குழு தலைவராகியுள்ளார். ஏற்கனவே 2016 முதல் 2019-ம் ஆண்டு வரை இந்த பொறுப்பில் இன்ஜமாம் இருந்தார். 53 வயதான இன்ஜமாம் 120 டெஸ்ட் மற்றும் 378 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவசாலி ஆவார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் தொழில்நுட்ப கமிட்டியில் அங்கம் வகிக்கிறார். இனி அந்த கமிட்டியில் நீடிக்க முடியாது.

பாகிஸ்தான் அணி, வருகிற 22-ந்தேதி முதல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், 30-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டிலும் பங்கேற்கிறது. இவ்விரு தொடருக்கான பாகிஸ்தான் அணியை இன்ஜமாம் தலைமையிலான தேர்வு குழு தேர்வு செய்து அறிவிக்க உள்ளது.

அதைத் தொடர்ந்து உலகக் கோப்பை போட்டிக்கான அணியை தேர்வு செய்வது அவரது முக்கிய பணியாக இருக்கும். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கும் பாகிஸ்தான் அணியை இவர் தான் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports