பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 556 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா சிறப்பாக ஆடி 160 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 93 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 72 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் பஹீம் அஷ்ரப், சஜித் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் அசத்தலாகப் பந்து வீசினர்.
இதனால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் பாபர் அசாம் 36 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட், வெப்சன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 7 ரன்னில் அவுட்டானார். 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 35 ரன்னுடனும், லபுஸ்சனே 37 ரன்னுடனும் களத்தில் உள்ளன. ஆஸ்திரேலியா இதுவரை 489 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 506 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பாகிஸ்தான் களமிறங்கியது. இமாம் உல் ஹக் 1 ரன், அசார் அலி 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக்குடன் கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தது. இதனால் பாகிஸ்தான் ரன் குவிப்பில் ஈடுபட்டது. சிறப்பாக ஆடிய பாபர் அசாம் சதமடித்து அசத்தினார்.
நான்காம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் 102 ரன்களுடனும், அப்துல்லா ஷபிக் 71 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றிபெற 314 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்துல்லா ஷபிக் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 228 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய வாவத் ஆலம் 9 ரன்னில் வெளியேறினார்.
பொறுப்புடன் ஆடிய பாபர் அசாம் 150 ரன்களை கடந்தார். இவருடன் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்தார். இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாபர் அசாம் 196 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட் சரிய போட்டி மிகுந்த பரபரப்பாக சென்றது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 3 விக்கெட் தேவைப்பட்ட நிலையில் ரிஸ்வான் தூணாக நின்றார். கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய முகமது ரிஸ்வான் சதமடித்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் எடுத்தபோது போட்டி டிராவில் முடிவடைந்தது. ஆட்ட நாயகன் விருது பாபர் அசாமுக்கு வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி தொடங்குகிறது.