ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலமாகியுள்ளனர். பெரும்பாலான பயங்கரவாதிகள் அங்கு பயிற்சி பெற்று, இந்தியாவுக்குள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், பயங்கரவாதிகளுக்கு சிலர் அடைக்கலம் கொடுக்கின்றனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரின் பட்டியலை ஜம்மு-காஷ்மீர் போலீசார் சேகரித்து வந்தனர். கடந்த 1990-ல் இருந்து இந்த பட்டியலை எடுத்து வைத்துள்ளனர். தற்போது, அவர்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளி, தப்பியோடிய குற்றவாளி என அறிவித்து, அவர்களின் சொத்துக்களை முடக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் கூறுகையில் ”இந்தியாவுக்கு துரோகம் செய்பவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலம் புகுந்துள்னர். அவர்கள் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அங்கிருந்து இந்தியாவில் பயங்கரவாத செயல்களை தூண்டிவிட முயற்சி செய்து வருகிறார்கள். இவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் பணி தொடங்கிவிட்டது. டோடா மாவட்டத்தில் இதற்கான பணி தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலம் புகுந்துள்ள 16 பேர் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.” என்றார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில புலனாய்வு பிரிவு போலீசார், சுமார் 4200 பேரின் பட்டியலை சேகரித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 1990-ல் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வருபவர்கள். இவர்களுடைய சொத்துக்கள் வருவாய்த்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை விற்கவோ, மாற்றவோ முடியாது. மேலும், வேண்டுமென்றே பயங்கரவாதிகளுக்கு தங்க இடம் கொடுத்தவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதன் மூலம் அப்பாவி மக்கள் மிரட்டப்படுவதில் இருந்து காப்பாற்றப்படுவது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
”ஜம்மு-காஷ்மீரின் சோபார் பகுதியில் பயங்கரவாதிகள் அதிகமாக உள்ள இடமாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள மக்கள், அசம்பாவித செயல்களுக்கு துணை போகமாட்டார்கள் என நம்புகிறேன். போலீஸ் மற்றும் பாதுகாப்புப்படையால் மீதமுள்ள வேலைகளை சிறப்பாக முடியும். புகலிடம் கொடுக்காதீர்கள். பல சகாப்தமாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் பயங்கரவாதம் காரணமாக பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர்” என துணைநிலை ஆளுநர் சின்ஹா தெரிவித்துள்ளார்.
1990-ல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எல்லைத்தாண்டி, ஆயுத பயிற்சி பெற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சென்றனர். பெரும்பாலானோர் பயங்கரவாத செயல்களுடன் காஷ்மீர் வந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் 23 ஆயிரம் பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 2010-ல் ஜம்மு-காஷ்மீர் அரசு, சரணடைந்தால் மறுவாழ்வுக்கு உதவி செய்யப்படும் என அறிவித்தது. 300 பேர் குடும்பத்துடன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியா வந்தனர். ஆனால், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கினர்.