இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 191 ரன்களில் சுருண்டது. பாபர் அசாம் 60 ரன்னும், ஆசாத் ஷபிக் 63 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இலங்கை சார்பில் லஹிரு குமார மற்றும் லசித் எம்புடெனியா ஆகியோர் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 271 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அந்த அணியின் தினேஷ் சண்டிமால் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் அடித்தார். அவர் 74 ரன்னில் அவுட்டானார்.
பாகிஸ்தான் சார்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீன் ஷா அப்ரிடி 5 விக்கெட்டும், முகமது அப்பாஸ் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, 80 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை பிரிக்க இலங்கை பந்து வீச்சாளர்கள் திணறினர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்தனர். ஷான் மசூத் மற்றும் அபித் அலி ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்தனர். ஷான் மசூத் 135 ரன்னும், அபித் அலி 174 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
3-ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 395 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் அசார் அலி 57 ரன்னும், பாபர் அசாம் 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அசார் அலியும், பாபர் அசாமும் இணைந்து பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடினர்.
இருவரும் வேகமாக ரன் சேர்த்ததால் பாகிஸ்தான் அணி 500 ரன்களை கடந்தது. இருவரும் இணைந்து 148 ரன்களை சேர்த்தனர்.
அணியின் எண்ணிக்கை 503 ஆக இருக்கும்போது சதமடித்து அசத்திய அசார் அலி 118 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து பாபர் அசாமும் சதமடித்தார். பாபர் அசாம் 100 ரன்னை கடந்தபோது பாகிஸ்தான் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்துள்ளது. பாபர் அசாம் 100 ரன்னுடனும், மொகமது ரிஸ்வான் 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 476 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.