Tamilவிளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது – ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலிய வீரர் பேட்கம்மின்ஸ் அதிருப்தி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையே ராவல்பின்டியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 476 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அசார் அலி 185 ரன்னும், இமாம்-முல்-ஹக் 157 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 459 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா, லபுசேன் முறையே 97, 90 ரன்கள் எடுத்தனர்.

நேற்றைய 5-வது நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 252 ரன் எடுத்தது. தொடக்க வீரர்களான ‌ஷபிக் (136 ரன்), இமாம்-முல்-ஹக் (111 ரன்) சதம் அடித்தனர்.

இந்தநிலையில் ராவல்பின்டியின் ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட்கம்மின்ஸ் அதிருப்தி அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பொதுவாக பேட்டிங்குக்கும், பந்துவீச்சும் சம அளவில் போட்டி இருக்க வேண்டும். இதுதான் நியாயமானதாக இருக்கும். அப்போதுதான் டெஸ்ட் போட்டிக்கான மதிப்பும் அதிகரிக்கும்.

இந்த ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் இருந்தது. இதுமாதிரியான ஆடுகளங்களில் விக்கெட் எடுப்பது மிகவும் சவாலானது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு எந்தவித சுவாரசியமும் இல்லாமல் டெஸ்ட் போட்டி முடிவு அமைந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த டெஸ்ட் போட்டியில் 5 நாட்களில் மொத்தம் 14 விக்கெட்டுகளே விழுந்தன. 1,187 ரன்கள் குவிக்கப்பட்டது.

பாகிஸ்தான்- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 12-ந் தேதி கராச்சியில் தொடங்குகிறது.