Tamilவிளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து வெற்றி

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில், 657 ரன்கள் குவித்தது. இதற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 579 ரன்கள் குவித்தது. இரண்டாம் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, பாகிஸ்தான் அணிக்கு 343 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கை துரத்திய பாகிஸ்தான், ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று 268 ரன்களில் சுருண்டது. சவுத் ஷகில் (74), இமாம் உல் ஹக் (48), முகமது ரிஸ்வான் (46), அசார் அலி (40) ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால் இலக்கை எட்ட முடியவில்லை. குறிப்பாக தேநீர் இடைவேளைக்கு பிறகு 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கடைசி 5 விக்கெட்டுகள் சரிந்தன.

74 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இரண்டாம் இன்னிங்சில் இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன் தலா 4 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின்மூலம் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 9ம் தேதி தொடங்குகிறது.