Tamilவிளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 657 ரன்னுக்கு ஆல் அவுட்

பாகிஸ்தான், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து ரன் குவித்தனர். பந்தை பவுண்டரிகளாக விளாசி சதம் அடித்த இருவரும், முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர். ஜாக் கிராவ்லி 122 ரன்களும், பென் டக்கெட் 107 ரன்களும் விளாசினர். இவர்கள் தவிர ஒல்லி போப், ஹாரி ப்ரூக் ஆகியோரும் சதம் அடித்து அசத்தினர். ஒல்லி போப் 108 ரன்களில் ஆட்டமிழக்க, ஹாரி ப்ரூக் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

போதிய வெளிச்சம் இல்லாததால் 75 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இதேபோல் விரைவாக 500 ரன்னை கடந்த அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஹாரி புடூக் 153 ரன்னில் அவுட்டானார். ஸ்டோக்ஸ் 41 ரன்னும், ராபின்சன் 37 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 657 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் ஜாஹித் முகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும், முகமது அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக் பொறுமையுடன் ஆடினர். இருவரும் அரை சதமடித்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்துள்ளது. ஷபிக் 89 ரன்னும், ஹக் 90 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.