Tamilவிளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் – 2வது இன்னிங்சில் இலங்கை 9/329

பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த சண்டிமால் 76 ரன்னில் அவுட்டானார். தீக்ஷனா 38 ரன்னும், பெர்னாண்டோ 35 ரன்னும் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ரன்னில் அவுட்டானார்.

இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், மெண்டிஸ், தீக்‌ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 4 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், மூன்றாம் நாள் நேற்று நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஒஷாடா பெர்னாண்டோ அரை சதமடித்து 64 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 76 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஒஷாடா பெர்னாடோ, குசால் மெண்டிஸ் ஜோடி 91 ரன்கள் சேர்த்தனர்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சண்டிமால் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 329 ரன்களை எடுத்துள்ளது. சண்டிமால் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 5 விக்கெட்டும், யாசீர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.