இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைதேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணியின் தனுஷ்கா குணதிலகாவும் அவிஷ்கா பெர்னாண்டோவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அவிஷ்கா 33 ரன்னிலும், அடுத்து இறங்கிய பானுகா ராஜபக்ச 32 ரன்னிலும் அவுட்டாகினர். சிறப்பாக ஆடிய குணதிலகா அரை சதமடித்து அசத்தினார். அவர் 57 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் சார்பில் மொகமது ஹஸ்னா 3 விக்கெட் வீழ்த்தினார் தொடர்ந்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.
இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி நிலை குலைந்தது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகமாக இப்திகான் அகமது 25 ரன்னும், சர்ப்ராஸ் அகமது 24 ரன்னும் எடுத்தனர். இறுதியில், பாகிஸ்தான் அணி 17.4 ஓவரில் 101 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி சார்பில் நுவான் பிரதீப், இசுரு உதானா தலா 3 விக்கெட்டும், வஹிந்து ஹசங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.