இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னையில் நடைபெற்ற உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெறும் 2-வது போட்டியிலும் ஆடவில்லை.
சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 80 சதவீதம் குணமடைந்து விட்டார் என பிசிசிஐ மருத்துவ குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் காய்ச்சலில் இருந்து குணமடைந்து முழு உடல் தகுதியை அடைவதற்கு சுப்மன் கில்லுக்கு மேலும் ஒரு வாரம் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக 14-ந்தேதி நடைபெறும் ஆட்டத்திலும், வங்காளதேசத்துக்கு எதிராக 19-ந்தேதி நடைபெறும் போட்டியிலும் அவர் ஆடுவது சந்தேகம் என கருதப்படுகிறது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உடல் நலம் முன்னேறி வரும் நிலையில், சுப்மன் கில் அகமதாபாத் புறப்பட்டு செல்ல இருக்கிறார். இதற்கிடையே ஜெய்ஸ்வால் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவர் பேக்-அப் வீரராக அழைக்கப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.