பாகிஸ்தானில் விராட் கோலிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர், அவர் ஆடுவதை பார்க்க ஆவலாக இருக்கிறோம் – முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி
மினி உலகக் கோப்பை தொடர் என்று அழைக்கப்படும் “சாம்பியன் டிராபி” முதன் முதலில் 1998-ம் ஆண்டு நடைபெற்றது. கடைசியாக 2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில், ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மார்ச் 1-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்தால், அவர் இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பை எல்லாம் மறந்துவிடுவார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்தால், அவர் இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பை எல்லாம் மறந்துவிடுவார். அவருக்கு பாகிஸ்தானில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இங்கு கோலி விளையாடுவதை பார்க்க ஆவலாக உள்ளோம்.
இவ்வாறு ஷாஹித் அப்ரிடி கூறினார்.