பாகிஸ்தானில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மாயம்
பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். நாட்டின் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பலுசிஸ்தான், சிந்து, கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் ராணுவம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவ ஹெலிஹாப்டர் ஒன்று நேற்று மாயமானதாக தகவல் வெளியானது.
அந்த ஹெலிஹாப்டரில் நிவாரணப் பணிகளை மேற்பார்வை செய்து வரும் கமாண்டர் ஜெனரல் சர்ப்ராஸ் அலி மற்றும் 5 மூத்த ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. பலுசிஸ்தானின் லாஸ்பேலாவில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மாயமானதாகவும் அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடந்து வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.