பாகிஸ்தானில் பழங்குடியின மக்களுக்கிடையே வெடித்த வன்முறை – 36 பேர் பலி

வடகிழக்கு பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களுக்கிடையே வெடித்த மோதலில் 36 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வாழும் மேல் குர்அம் [Upper Kurram] மாவட்டத்தில் உள்ள போஷேரா [Boshera] கிராமத்தில் கடந்த 5 நாட்களாக மோதல்கள் நடந்துவருகின்றன. ஆப்கனிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஹைபர் பதுன்காவா மாகாணத்தில் இந்த போஷேரா கிராமம் அமைந்துள்ளது.

போஷேரா, மலிகேல் [Malikhel], தண்டர் [Dandar] உள்ளிட்ட கிராமங்களில் வசித்துவரும் இஸ்லாமின் ஷியா பிரிவை பின்பற்றும் பழங்குடியினருக்கும் சன்னி பிரிவைப் பின்பற்றும் பழங்குடியினருக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்துவந்துள்ளன. சமீபத்தில் அரசு நடத்திய பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் திரும்பிய நிலையில் போஷேரா கிராமத்தில் கடந்த 4 நாட்கள் முன் நிலத்தகராறு காரணமாக மீண்டும் இரு குழுக்களிடையிலும் வன்முறை வெடித்துள்ளது.

துப்பாக்கிகள், ராக்கெட் லான்சர்கள் என நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி இரண்டு தரப்பும் சண்டையிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு மட்டும் நான்கு பெரிய தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதல்களில் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 162 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கலவரக்காரர்கள் தங்கியிருந்த பதுங்கு குழிகளை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இந்த வன்முறையானது மேல் குர்அம் மாவட்டத்தில் மற்ற பகுதிகளுக்கும் பரவி உள்ளதால் நிலைமையை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முடியிலுமாக முடங்கியுள்ள நிலையில் கலவரத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools