Tamilசெய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த 2 முக்கிய கமாண்டர்கள் உள்பட 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அருகிலிருந்த வீடுகளில் வசித்த பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர்.

இதற்கிடையே, பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நேற்று பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 38 பேர் உயிரிழந்தனர் என்றும், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். 20க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தாக்குதல் நடந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.